நேற்று படித்து முடித்த பாலகுமாரனின் புத்தகம் ” என்றென்றும் அன்புடன்….”

நான் பாலகுமாரனுக்கு புதியவன் அல்ல- பரிசயமானவன் தான். 1984ல் இருந்த எழுத்துக்கும் இன்றைய தினத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இருக்க வேண்டியதுதான் முறையும் கூட.

அன்னாரின் எழுத்து என்றுமே சக்தி வாய்ந்தவை. இரும்புக் குதிரையிலிருந்து இன்று வரை, அவர் எழுத்தின் வேகத்தில் படிப்பவருக்கும் மூச்சு வாங்கும், கொஞ்சம் நின்று இளைப்பாறத் தோன்றும். இத்தனை வருடங்களுப்பின்னும், அதே வேகம் பார்ப்பது,  அவரின் எழுத்துக்கு இன்னும் வயசாகவில்லை என்று தெரிகிறது.

முதல் பார்வையில் படித்து முடித்தவுடன் தோன்றியது- ஒரு நல்ல கதையைப் படித்தேன் என்றும் சொல்ல முடியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளனை ரசித்தேன் என்றும் சொல்ல முடியவில்லை.

எழுதிட்ட சில விஷயங்கள் நம்புவதற்க்குக் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு சினிமாவில் நாயகனும் , நாயகியும் கலந்து பாடுவதை ஒப்புக் கொண்டால் இதில் ஒன்றும்  நெருடலில்லை. ஆனால் இதெல்லாம் சாத்தியமா? எந்த விகிதாச்சாரத்துக்குச் சாத்தியம் என்று நினைக்கத் தோன்றுகிறது!

பட்டவர்த்தனத்துக்கும், ஆபாசத்துக்கும் ஒரு நூலிழை தான் வேறுபாடு. ஒரு எழுத்தாளர், கத்தி மேல் நடப்பது போல பயணப் பட வேண்டும். இந்தப் புத்தகத்தில் கொஞ்சம் கத்தியிலிருந்து சறுக்கி லேசான காயம் பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது- சில இடங்களில் தவிர்க்கக் கூடிய எழுத்து விரசம்.

கொஞ்சம் அஜீரணத்துடன் தான் அடுத்த நூலுக்கு நகர்கிறேன்.