“அப்பா, ஐஸ் வாங்கித் தரயா “
“ஸ்கூலுக்கு லேட்டாச்சுப்பா. சாயந்தரம் பாக்கலாம்”
இந்த மாதிரி ஒரு உரையாடல் விகாசுக்கும் அவன் அப்பாவுக்கும் அடிக்கடி நடக்கும். என்ன வித்தியாசம்னா சாயந்தரம் இவனே மறந்திருந்தால் கூட அப்பா ஞாபகப் படுத்தி அந்தக் குச்சி ஐஸை வாங்கிக் கொடுத்துடுவார். அவ்வளவு பாசமா, நேர்மையான்னெல்லாம் அலசத் தெரியாத வயசு.
ரொம்பச் சின்ன வயசு நடவடிக்கைகள் அவ்வளவாக ஞாபகம் இல்லாவிட்டாலும், அப்பா பின்னால் உட்கார்ந்து சைக்கிளில் போகும் காட்சி மட்டும் மறக்கவே இல்லை. அப்பாவின் இடுப்பை இறுக்கக் கட்டிக் கொண்டு, கண்ணை லேசாக மூடிக் கொண்டு, தூள் பக்கோடா வாசனையை வைத்தே ஐயர் பலகாரக் கடையை காண அரைக் கண்ணை மட்டும் திறந்து மூடுனதெல்லாம் இன்றும் அடிக்கடி கண்ணில் வந்து போகும் காட்சி.
ஆனால், காலையில் சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து அப்பாவைக் கட்டிப் பிடிக்கும் போது அவரிடமிருந்து வரும் அந்த விபூதி வாசனை மட்டும் மறக்கவே முடியாது. யார் பழனி போனாலும் வீட்டுக்கு சித்தனாதன் விபூதி ஒரு பாக்கெட் வந்து விடும் – காலியானதாக சரித்திரமே கிடையாது. உள்ளூரில் வாங்கின விபூதியைக் கையால் கூட தொட மாட்டார். “மண்ணு மாதிரி, வாசனையே இல்லை” என்று பல விமரிசங்கள் வந்து விழும்.
அவர் வேலை செய்யும் கடை ஸ்கூலுக்குப் பக்கத்தில தான் இருக்கரதால, என்ன வேலை இருந்தாலும், மதியம் சாப்பாட்டு நேரத்தில அப்பாதான் சோத்துக் கூடையுடன் அருவார். அப்ப விபூதி வாசனை போய் பல விதமான மளிகை ஐட்டங்களோட வாசனை தெரியும். சாயந்திரம் வேலையில் இருந்து திரும்பியவுடன் குளித்து விட்டு அப்பா போட்டுக் கொள்ளும் குட்டிக்குரா பௌடர் வாசனை வீடே மணக்கும. அப்பா கிட்டேயே கேட்ருக்கான் “எதுக்குப்பா, வித விதமா பவுடர் போட்ரேன்னு”.
“நான் என்ன கம்பேனிலயடா வேல செய்யரேன். இருக்கறது மளிகைக் கடையில். படுக்கைல படுத்தா மல்லி வாசம் வந்தா பரவாயில்ல, மிளகா காரக்கூடாது”.
இதெல்லாம் என்றோ நடந்தாலும் இன்று அந்த நினைப்பே நறுமணத்தைக் கூட்டுகிறது. அவனுக்கு இப்பவும் அந்த கிராம வீதியில் போவது போல் தான் இருக்கிறது. அவ்வளவு பசுமையான நாட்கள்.
“என்ன விகாஸ். ரொம்ப நேரமா கேட்ட கேள்விக்கு பதிலே காணோம்” – தன் வீ பீ எனப்படும் வைஸ் ப்ரெசிடென்ட் ராமனாதன் குரல் கேட்டு அதிர்ந்து நினைவலைகளில் இருந்து வெளியே வர முயற்ச்சித்தான். தான் எங்கு இருக்கிறோம் என்று உணர ஆரம்பித்து, கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த அந்த உலகப் ப்ரசித்தி பெற்ற பாலத்தை வைத்துத்தான் தான் இருப்பது பள்ளத்தூர் அல்ல, ஆஸ்த்ரேலியா என்பதை உணர்ந்தான்.
“என்ன உடம்பு ஏதாவது சரியில்லையா. நாளைக்கு கஸ்டமரோட கடைசி மீட்டிங். இதுல நம்ப கம்பெனிய எப்படி ப்ரொஜெக்ட் பண்றோமோ அதப் பொறுத்துத் தான் இருக்கு, இந்தப் ப்ராஜக்ட் நமக்குக் கிடைக்கறதும், கிடக்காததும்”.
“சாரி சார். கொஞ்சம் லேசா தலவலி”.
“ஓ கே. ஒண்ணு பண்ணு. போய் லன்ச் முடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க. ஈவினிங் ரிலாக்ஸ் பண்ணிட்டு நாளைக்கு ஞாயித்துக் கிழமை தானே. ஒரு ஒன்பது மணிக்குப் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு மீட் பண்ணி அப்படியே ரிவ்யூ பண்ணலாம்” என்றார் பாஸ்.
அப்பாடா என்று விடுவிச்சுண்டு மதியம் வந்தவன் மாலை ஏழு மணிக்குத்தான் டைமண்ட் ஹார்பர் பக்கம் வந்து அந்தக் குளிர்ந்த காற்றைக் கொஞ்சம் ஸ்வாசித்தான். நேற்றுத் தான், இங்கு உள்ள உலகப் ப்ரசித்தி பெற்ற அந்த தியேட்டரில் படம் பார்ப்பதற்க்கு பதிமூணு டாலர் குடுத்து டிக்கட் வாங்கி இருந்தான். ஞாயித்துக் கிழமை படம் பாத்துட்டு , கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு சாயந்திரம் பகழ் பெற்ற ‘போண்டாய்’ பீச்சையும் ஒரு நடை பாத்துட்டா, திங்கள் கடைசி மீட்டிங்- அப்புறம் ஏர கட்ட வேண்டியதுதான் என்று நினைத்திருந்தான்.
ஊரில் இருந்து வந்த அந்த போன் கால் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது- ‘அப்பா உடம்பு கொஞ்சம் கொஞ்சமா இறங்கிண்டே வருது. நீ ஒரு நடை வந்து போறது நல்லது” ன்னு சித்தப்பா பேசினார்.
‘என்னாச்சு சித்தப்பா”?
“ஒண்ணுமில்லப்பா. வயசுதான் காரணம். கொஞ்சம் மூச்சுத் திணரல் இருக்கு. இப்பத்து டாக்டர்களெல்லாம் ஆக்ஸிஜன் வெக்கலாங்கரா. எனக்கென்னவோ இது ஸ்வாசம் வாங்கரதோன்னு தோணுது. அப்படி இருந்தா ரெண்டு பகல் தாங்காதுன்னு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். அதான் உங்கிட்ட சொல்லிடலாமுன்னு- நீ மூத்த புள்ளயாச்சேப்பா. பக்கத்துல இருந்தா அப்பாக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கும்”.
எவ்வளவு நாசூக்கா சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லி விட்டார், “எதாவது நடந்தால் நீ தேவை” என்று.
“ஒரு முக்கியமான மீட்டிங்குக்காக வந்திருக்கேன். திங்கள் தான் அந்த மீட்டிங் – இப்ப எப்படி” என்று தடுமாறினான்.
கொஞ்சம் விவரம் தெரிந்த சித்தப்பா “யோசனை பண்ணிக்கோப்பா” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
சினிமா டிக்கெட்டைக் கிழித்துப் போட்டு விட்டு அங்கு சுழல் சுழலாக ஒடும் அந்த வினோதமான தண்ணி ஃபௌன்டனைப் பார்த்து, நம்ப வாழ்க்கையும் இப்படித்தானோன்னு வியந்தான். பெரிய விஷயங்கள் கை கூடி வரும் போதெல்லாம் அதுக்கு ஏதாவது ஒரு முட்டுக் கட்டை வந்து விடும். ப்ரம்மப் ப்ரயத்னம் பண்ணி ஏதாவது சமாளிச்சு வெளியே வருவான். ஆனால் இப்பல்லாம் அதுவே கொஞ்சம் அலுப்பாக மாறத் தொடங்கி இருக்கு. மனுஷனுக்கு வாழ்க்கைல சோதனை வரலாம், ஆனால் சோதனையே வாழ்க்கையாயிடுத்து.
சீ. . . இதென்ன சினிமா வசனம் மாதிரின்னு தலையை உலுக்கிண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான். தூரத்துல போர படகுல சுற்றுலாக் கூட்டம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. சனிக்கிழமைக் கூட்டம் எப்பொழுதும் காலியாக ஒடும் மோனோ ரயிலையும் விட்டு வைக்கவில்லை. எது என்னவானாலும், எத்தனை கூட்டம் வந்தாலும், அந்த மோனோ ரயில், ஒரே தண்டவாளத்தில் அந்தரத்தில் ஓடினாலும், தன் கடமையை விடாமல் எல்லோரையும் சுமந்து போய் மகிழ்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று எதோ தோன்றியவனாக எழுந்து தன் பாஸ் ஹோட்டல் ரூமுக்குப் போக ஆரம்பித்தான்.
“என்ன சொல்ரே விகாஸ் , உனக்கு ஏதாவது பைத்தியம் புடுச்சுடுத்தா” என்ற வீ பியை மௌனமாகப் பார்த்தான்.
“ஆறு மாசமா இந்தப் ப்ராஜக்டு கிடக்கணுங்கரத்துக்காக போராடிண்டிருக்கோம். இங்க வந்தே மூணு வாரம் ஆச்சு. இப்ப எல்லாம் முடிஞ்சு நம்ப கைக்கு வரும் போது இண்டியா போணுங்கரயே. உன்னத்தானே இதுல ரொம்ப பெரிய ஸ்பெஷலிட்டா க்ளையண்ட் கிட்ட சொல்லிருக்கோம். இப்ப எப்படி ” என்று பாஸ் கண் சிவந்து கேட்டார். சிவப்பு கோபத்தினாலா அல்லது ஆஸ்த்ரேலிய முன்னிரவின் விசேஷத்தாலா என்று அவனுக்கு அலச நேரமில்லை.
“இல்ல சார். அப்பாவுக்கு ரொம்ப சீரியஸ். நான் இருக்கணும்னு ஃபீல் பண்றா. க்ளையண்ட்டுக்கு நான் சொல்ல வேண்டியதெல்லாம் நேத்திக்கு வைண்ட் அப் மீட்டிங்லயே சொல்லிட்டேன். திங்கள் கிழமை கடைசி ரௌண்ட நீங்க ஈசியாப் பாத்துக்கலாம். அதுக்குத்தான் காத்தால மூணு மணி ஃப்ளைட்ல டிக்கட் போடச் சொல்லிட்டேன். அதுவே நான் எங்க கிராமத்துக்குப் போறதுக்கு செவ்வாய்க் கிழமை ஆயிடும்”
வீ பீ மேலும் நரம்பு புடைக்க கத்தினார் ” இதனால் என்ன ஆகும் தெரியுமா? இந்தப் ப்ராஜக்ட் வரலேன்னா இத்தன நாள் உழப்பும் போயிடும். இதுக்காக நம்ப செலெக்ட் பண்ணி வெச்சுருக்கிற டீமை வீட்டுக்கு அனுப்பணும். சிசுவேஷன் ஹாண்டில் பண்ணத் தெரியல்லேன்னு எம். டி கத்துவார். என் ப்ரொமோஷனை விடு, உனக்கு ஏற்பாடு பண்ணி வெச்சுருந்த ப்ராஜக்ட் டைரக்டர் போஸ்ட் போச்சு. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டா உன்னால அந்த சீட்ட இனிமே பிடிக்க முடியாது”
“நான் என்ன சார் பண்ரது. எல்லாம் புரியறது. ஆனால நான் மூத்த பையன் என் கடமைய செய்ய வேண்டாமா”
“:என்னயா கடமை. நானும் கும்மோணத்துக்காரந்தான்.எனக்கும் இதெல்லாம் தெரியும். நீ இல்லன்னா உன் தம்பி பாத்துப்பான். அஞ்சு வருஷம் முன்னாடி நான் ஜப்பான்ல மாட்டிண்டப்ப என் தம்பி தான் எங்கம்மாக்கு எல்லாம் செஞ்சான். சொல்லப் போனா என் அப்பா நான் பொறக்கரதுக்கு முன்னாடியே போயிட்டதால,என்னப் பெத்தவாளுக்கு நான் இது முட்டும் எந்தக் காரியமும் செஞ்சதில்லை. என்ன பண்ரது, நம்ப வேலை அப்படி”.
கொஞ்சம் மூச்சு வாங்கித் தொடர்ந்தார் “ஆனா இந்த ஆப்பர்சூனிடிய விட்டா உன்னால அந்த பீ.டீ நாக்காலிய மோந்து கூடப் பாக்க முடியாது. போய் வேலயப் பார். திங்கக்கிழம சாயந்திரம் நம்ப ப்ரெசென்டேஷன் முடியற வரைக்கும் கூப்பிட வேண்டான்னு ஊர்ல சொல்லிடு ” என்று சொல்லி மறுபடியும் கோப்பைய நிரப்புவதுக்கு அவர் நகந்த போது தான் அவன் வெடித்தான்.
“என்ன சார் பேசுரீங்க. என்னப் பெத்தவர் மூச்சு வாங்கிண்டு நாடிய எண்ணிண்டிருக்கார், நீங்க இப்படிச் சொல்றிங்க. இந்தப் ப்ரோஜக்ட் வருமா போகுமான்னு தெரியாது. ஆனா எங்கப்பா கண்டிப்பா போயிடுவார். இனிமே கேட்டாக் கூட வரமாட்டார்.
உங்களுக்கு பெத்தவாளுக்கு அந்திமக் காரியங்கள் செஞ்சு பழக்கம் கிடையாது. எங்கம்மாக்கு நான் பண்ர போது ஒவ்வொரு விஷயத்தையும் எங்கப்பா வெளக்கிருக்கார். அந்த ஆத்மா, புள்ள மடில உசிர விடரதுக்கு எவ்வளவு பறக்கும். அந்தக் கடசி வாய்ப் பால புள்ள விடரதுக்குதானே ஏங்கிட்டு இருக்கும்.
எவ்வளவு எடத்துக்கு என்ன கையப் புடிச்சுணு கூட்டிண்டு போயிருக்கார். அவருக்கு நான் தோள் கொடுக்க வேண்டாமா?
நேரம் தவறாம சாப்பாடு கொண்டு வந்தவருக்கு ஒரு வாய் அரிசி கூட போடலேன்னா, நான் என்ன புள்ள?
கேட்டப்பொல்லாம் ஐஸ்க்ரீமும், பக்கோடவும் வாங்கிக் குடுத்தவர்க்கு நான் அட்லீஸ்ட் உப்பில்லாத பண்டமாவது போட வேண்டாமா?
நான் இல்லாம அந்த ஜீவன் நகராது. என்னதான் பேரப் பசங்க நெய்ப் பந்தம் பிடித்து வழிக்கு வெளிச்சம் காட்டினாலும், போர பாதைல வரும் பல இடறுகளுக்கு நான் புள்ளயா கூட இருந்து அந்த ஜீவனைக் கரையேத்த வேணாமா?
இதெல்லாம் செய்யாம அப்புறம் எவ்வளவு சம்பாதிச்சுத்தான் என்ன ஆகப் போரது சார்” மிரண்ட சாதுவை பிரமிப்பாகப் பார்த்தார் பாஸ்.
” என்ன சொன்னீங்க. அந்த பீ டி நாக்காலி மோந்து கூடப் பாக்க முடியாதா. போகட்டும் சார்.
ஆனா வாசனையப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். நான் ஊருக்குப் போறதுக்குள்ள எங்கப்பா போயிட்டா அப்புறம் அந்த விபூதி வாசனையும் , குட்டிகூரா போட்ட அப்பாவையும் நான் ஜென்மத்துக்கும் உணர முடியுமா சார். நான் கொஞ்ச லேட்டா போனாக்கூட ஐஸ் பொட்டில போட்டு வெச்சுருப்பா. என்னப் பொத்திப் பொத்தி வளர்த்த அந்த உடம்பு, யூடிகோலோன் போட்டு நாறிண்டு கிடக்கணுமா சார்.”
அப்படிப்பட்ட காசு எனக்குத் தேவை இல்லை சார். அதுக்காக நான் கம்பெனிய அம்போன்னு விட்டுட்டுப் போல. என் பார்ட் எல்லாம் ஓவர். என்னுடைய கடைமயா இந்தப் ப்ராஜக்ட்டுக்கு என்ன தேவையோ எல்லாம் செஞ்சுட்டேன். இப்ப எங்கப்பாவுக்கு என் ட்யூட்டிய செய்யணும் ஸார். எனக்கென்னவோ வெள்ளக்காரன் இன்னும் நன்னா புரிஞ்சுப்பான்னு தோண்றது” என்று சொல்லியபடியே போனை எடுத்து “சித்தப்பா, ஊருக்கு செவ்வாக் கிழமை எப்படியும் வந்துடுவேன்…” என்று பேசிக் கொண்டே நகர்ந்தவனின் நடையிலும் பேச்சிலும் தெளிவு தெரிந்தது. தலைக்கு மேல் கட கட வென்று அவனைக் கடந்து போன மோனோ போனதை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்தான்.
Story written by me was published in www.sirukathaigal.com on 28-Aug-2014