வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது …கூடாது . ஒரு மாத அரிசி பருப்பு வகையறாக்களை வாங்கி வெச்சாச்சு – டப்பா நிறைய பிள்ளைங்களுக்கு பிஸ்கட்டு இருக்கு – நிறைய நொறுக்கு தீனி இருக்கு – இன்டர்நெட் இருக்கு வெளிநாட்டு உறவினர்களுடன் பேசலாம் – கேபிள் டீ வீல நல்ல நல்ல படமா போடறான்  – 21 நாள் சமாளிக்கலாம் .
ஒரு படம் முடிஞ்சு அடுத்த படத்துக்கு முன்னாடி கொஞ்சம் காத்து வாங்கலாம்னு பால்கனியில் வந்து நின்னா ஜில்லுன்னு காத்து – இன்னும் மெட்றாஸ்ல இந்த  வருஷம் என்னவோ வெக்கை அவ்வளவு வரல – நினைச்சுண்டே எதிர பார்த்தா வரிசையா மூடி இருந்த கடைகள்
அயர்ன் பண்ற அம்மாவைக் காணோம் – தினமும் துணி தேய்த்து சம்பாதிக்கறவங்களாச்சே என்ன பண்ணுவாங்களோ

டைலர் கடை திறந்து நாலு நாளாச்சு

ஒரே ஒரு ஆட்டோக்காரர் பல்லு குத்திண்டு இருக்கார்

தினசரி பூ வாங்குபவரும் சுவாமிக்கு பூவில்லாமல் பூஜைகள் நடப்பதால் பூக்காரி முகமும் பூவைப் போலவே வாடி இருந்தது
யார்தான் காப்பாத்தப் போறாங்களோன்னு நினச்சு வானத்தை பார்த்து கும்பிடு போட்டுட்டு குனிஞ்சா நம்ப பிளாட்டை காக்கற முனுசாமி கோடம்பாக்கத்துலேர்ந்து சைக்கிளை மிதிச்சுண்டு நேரத்துக்கு டியூட்டிக்கு வந்துட்டார்
கீழே ஓடிப்போய் ஒரு டம்ப்ளர் காபியையும் ஒரு பொட்டலம் மிக்சரையும் கொடுத்து வீட்டுக்கு வந்தவுடன் பூஜைக்கப்புறம் நெய்வேத்தியம் பண்ணின ஒரு திருப்தி மனதில் பரவியது